ஆதவ் அர்ஜுனா விளக்கம் ஏற்புடையதல்ல: திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்திருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது,
''கட்சிக்குள் வந்துவிட்டால் எவ்வளவுபெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கட்சியின் நடைமுறைக்கு இணங்க செயல்பட வேண்டியது அவசியமானது.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த முடிவு, அவருக்கு சரி என்ற அடிப்படையில் மேற்கொண்டுள்ளார். அவரின் குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும்.
கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். கட்சியின் நலன் கருதி செயல்பட வேண்டும்.
கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பதோ அல்லது வெளியேற வேண்டும் என்பதோ நம் நோக்கம் அல்ல. கட்சியின் நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பதே இடைநீக்கத்தின் நோக்கம்.
கட்சி என்பது தலைவர் என்ற தனிநபரின் முடிவு அல்ல. அது ஒரு அமைப்பின் முடிவு. உயர்நிலைக் குழுவில் கலந்தாலோசிப்பது என்பது கட்சியின் நடைமுறை. ஆனால், ஆதவ் அர்ஜுனா அதனை உள்வாங்கவில்லை'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?