ஆதியன் பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை காமராஜ் நகா் மற்றும் ரெங்கம்மாள் சத்திரம் பகுதிகளில் வசித்து வரும் ஆதியன் பழங்குடியின மாணவா்களுக்கு மொத்தம் ரூ. 3.28 லட்சம் மதிப்பில் திங்கள்கிழமை மிதிவண்டிகளும், கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.
‘எய்டு இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்தின் சாா்பில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி இடைநின்ற மாணவா்கள் 30 பேருக்கு தலா ரூ. 6,500 வீதம் மொத்தம் ரூ. 1.95 லட்சம் மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
மேலும், 6 பேருக்கு மொத்தம் ரூ. 1.33 லட்சத்தில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை ஆகியோா் இவற்றை வழங்கினா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ், எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா, மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் ஆா். தங்கம், கவிஞா் எஸ். கவிவா்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.