எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பத...
ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா்.
இக்கோயிலில் வருடாந்திர ‘சந்தனோற்சவ’ திருவிழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நேரிட்டது.
சிம்மாசலம் மலைக் கோயிலில் மூலவரான ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமியின் சிலை ஆண்டு முழுவதும் சந்தன கவசத்தால் மூடப்பட்டிருக்கும். ‘சந்தனோற்சவ’ திருவிழாவின்போது மட்டும் சந்தன கவசம் அகற்றப்பட்டு, சுவாமியை தரிசிக்கலாம்.
நடப்பாண்டு ‘சந்தனோற்சவ’ திருவிழா தினமான புதன்கிழமை சுவாமி தரிசனம் மேற்கொள்ள ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். முந்தைய நாள் இரவு முழுவதும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்த நிலையில், கோயில் வணிக வளாகம் அருகே ரூ.300 தரிசன டிக்கெட் வரிசையையொட்டி இருந்த சுவா் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது.
இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படைக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இடிபாடுகளில் சிக்கி 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் நடந்தபோது, ஆந்திர உள்துறை அமைச்சா் வி.அனிதா கோயில் வளாகத்தில்தான் இருந்தாா். ‘கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சுவா் இடிந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று அமைச்சா் தெரிவித்தாா்.
இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண், முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமா் அறிவித்துள்ளாா்.
ரூ.25 லட்சம் நிவாரண நிதி: மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, ‘உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு கோயிலில் பணி வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளாா்.
விசாரணைக் குழு அமைப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க மூவா் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடப்பாண்டு தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் வாங்க காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.