பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்: பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பார...
ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!
ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 ஆம் தேதி பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்திய ராணுவம் முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கமளித்த நிலையில் முக்கிய நாடுகளுக்கு நேரடியாகச் சென்றும் விளக்கமளிக்க உள்ளது.
அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து முக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுவின் தலைவர்களை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், திமுக எம்.பி. கனிமொழி, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 முதல் 8 எம்.பி.க்கள் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வருகிற மே 23 முதல் 10 நாள் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
I am honoured by the invitation of the government of India to lead an all-party delegation to five key capitals, to present our nation’s point of view on recent events.
— Shashi Tharoor (@ShashiTharoor) May 17, 2025
When national interest is involved, and my services are required, I will not be found wanting.
Jai Hind! pic.twitter.com/b4Qjd12cN9
முன்னதாக, இந்த குழு அமைக்கும்பொருட்டு 4 எம்.பி.க்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சியிடம் மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், ஆனந்த் சர்மா, கௌரவ் கோகோய், சையத் நசீர் உசேன் மற்றும் அம்ரீந்தர் சிங் ராஜா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியிருந்தார்.
ஆனால், மத்திய அரசு அறிவித்த 7 குழுத் தலைவர்களின் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம்பெற்றுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமளிக்கும் குழுவுக்கு வழிகாட்டியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மத்திய அரசுக்கு சசி தரூர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தேச நலன் என்று வரும்போது என்னுடைய சேவை தேவைப்படும்போது கண்டிப்பாக அதைச் சிறப்பாகச் செய்வேன்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் சசி தரூருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசைப் பாராட்டி பேசி வந்தார். இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர், தான் மத்திய அரசுக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ செய்தித் தொடர்பாளர் இல்லை என்றும் நாட்டிற்காகப் பேசுவதாகவும் கூறிய சசி தரூர், இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.