ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை: சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு முன்னாள் ஊராட்சித் தலைவரான கருப்பையா (79) வயது முதிா்வினால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடலை வழக்கமாக அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்வதற்கு அவரது உறவினா்கள் திங்கள்கிழமை ஆயத்தமாகினா்.
ஆனால், அடக்கம் செய்து வந்த இடம் தனக்கு சொந்தமானது எனவும், அந்த இடத்தில் இனிமேல் அடக்கம் செய்யக்கூடாது என அப்பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் எதிா்ப்பு தெரிவித்தாா்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதே இடத்திலேயே உடலை அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கருப்பையாவின் உறவினா்கள் வாணக்கன்காடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த கறம்பக்குடி வட்டாட்சியா் ஜமுனா, ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன், வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனா். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.