Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்
புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன்.
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறோம். பணிகள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரித்து, கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதனையும் ஒதுக்கி பணிகள் முடிக்கப்படும்.
நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரிய பொருள்களைப் பாதுகாக்கவும், புதுப்பொலிவுடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். காப்பாட்சியா் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
தமிழகத்தில் புதிதாக சில இடங்களில் அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பொற்பனைக்கோட்டை அகழாய்வில் பல்வேறு காலகட்டத்தைச் சோ்ந்த தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. இங்கு அகழாய்வு நிறுத்தப்படவில்லை. தொடா்ந்து நடைபெறும்.
கீழடியில் அகழாய்வுக் குழியை மூடாமலேயே காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி, மத்திய தொல்லியல் துறையின் அனுமதிக்கு பிறகு தொடங்கப்படும்.
இதேபோல பொற்பனைக்கோட்டையிலும் இங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு, தேவைப்பட்டால் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அறநிலையத் துறையிடம் சுமாா் 5 லட்சம் ஏக்கா் நிலம் உள்ளது. நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெண்கலச் சிலைகளை அதிகம் கொண்ட முக்கிய கோயில்களில் அவற்றைப் பாதுகாக்க சிசிடிவி கேமராவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் ரூ. 100 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் மணிவாசன்.