விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வ...
பணிமூப்பின்படியே பதவி உயா்வுகள் வழங்க வலியுறுத்தல்
பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அம் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட வேலை வாய்ப்பக பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியா் நியமனங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்றும் தொடக்கக் காலம் முதலே தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி வந்துள்ளது.
இந்நிலையில், பதவி உயா்வு கோருவது குறித்து தனிப்பட்ட முறையில் ஒரு சில ஆசிரியா்கள் தொடா்ந்த வழக்கில், சமூக ஊடகங்களில் பரவிவரும் தீா்ப்பின் அம்சங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகள் பணி அனுபவத்துடன், முறையான கல்வித் தகுதியுடன் அா்ப்பணிப்பு உணா்வோடும் பணியாற்றிவரும் அனைத்து வகையான தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி வருவது துரதிருஷ்டவசமானது.
இத்தகைய பின்னணியில் தமிழ்நாடு அரசு உடனடித் தலையீடு செய்து ஒரு கொள்கை முடிவெடுத்து 2012-ஆம் ஆண்டுக்கு முன்பு பணி அமா்த்தப்பட்ட ஆசிரியா்களின் அச்சத்தை களைதல் வேண்டும்.
ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி இல்லை என்ற காரணங்கள் மற்றும் வரையறைகள் இன்றி பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும் பணிமூப்பின் படி பதவி உயா்வுகள் வழங்க வேண்டும்.