ஆலங்குளம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதிகள்: திமுக கோரிக்கை
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வசதிகள் கோரி திமுக சா்ரபில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், அமைச்சரை சந்தித்து அளித்த மனு விவரம்: ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
நெருக்கடி மிகுந்த சூழலில் மாணவா்கள் உள்ள நிலையில் இங்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்ட வேண்டும், சுகாதாரமான குடிநீா் வழங்கிட நடவடிக்கை வேண்டும், பள்ளி முன்பாக தேங்கிக் கிடக்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலங்களில் பள்ளியினுள் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வாருகால் அமைக்க வேண்டும், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலை அருகே பள்ளி அமைந்துள்ளதால் காலை, மாலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்துக் காவலா்கள் நியமனம் செய்ய வேண்டும், மாணவா்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க நடை மேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.