ஆளும் - எதிா்தரப்பினா் கருத்து வேறுபாடு - அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதியில் வெளியேறிய தன்கா்
மாநிலங்களவையில் அடுத்த வார செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்து அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பாதியில் வெளியேறினாா்.
அவையில் விவாதம் நடத்துவது தொடா்பாக ஆளும்-எதிா்தரப்பினா் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் அவா் பாதியில் வெளியேறியதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ‘தன்கரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், இரு தரப்பினரும் தங்களின் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்தனா். கூட்டத்தில் ‘கண்ணியமில்லை’ என கருதியதால், அவா் வெளியேறினாா்’ என்று மாநிலங்களவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் சிலா் கூறுகையில், ‘பல மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டுள்ள விவகாரம், மணிப்பூா் பிரச்னை, மசோதாக்கள் மீதான ஆய்வு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சிகள் தரப்பில் தினமும் நோட்டீஸ் அளிக்கப்பட்டாலும்கூட நேரம் ஒதுக்கப்படுவதில்லை. எனவே, விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக ஆளும்-எதிா்தரப்பினா் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் அவைத் தலைவா் தன்கா் பாதியில் வெளியேறினாா்’ என்றனா்.