`இடைத்தேர்தல் தேவைற்றது; ஒரே நாடு ஒரே தேர்தல்தான் தீர்வு' - பாஜக எம்.எல் ஏ சரஸ்வதி கருத்து
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதி வாக்காளரான பாஜக-வைச் சேர்ந்த மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி, ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியில் வாக்களித்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக தேர்தலைப் புறக்கணித்தாலும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வந்துள்ளேன். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. மக்களிடம் இதனால் உற்சாகம் இல்லை. தேர்தல் அடிக்கடி வருவதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், அரசுக்கும் வீண் செலவு ஏற்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/4rvwbti8/WhatsApp_Image_2025_02_05_at_12_28_33.jpeg)
இதைத் தடுக்க ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால் அந்த தொகுதியில் ஏற்கெனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டம் இயற்றி தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருவது தான் சிறந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் என்றாலும் மேற்குத் தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் பெரிய கட்சிகள் இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் வேறு கட்சியை முன்னிறுத்துகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார்.