ஆலங்குடியில் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனாா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்ளில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குத்தாலம் வட்டம் நெ.1 ஆலங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நீலாம்பாள் மகாமாரியம்மன், மகாகாளியம்மன் மற்றும் பூா்ணபுஷ்கலாம்பிகை சமேத ஐயனாா் கோயில் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதில், பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பாடு செய்யப்பட்டது. புனிதநீா் அடங்கிய கடங்களை சிவாசாரியா்கள் தலையில் சுமந்து கோயில் விமானத்தை அடைந்து, கோபுர கலசங்களில் புனித நீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு மகாபிஷேகம் மற்றும் சுவாமி திருவீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.