கொத்தனாா் குத்திக் கொலை: உறவினா்கள் 4 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே இரு குடும்பத்தினரிடையேயான பொதுவழி பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை கொத்தனாா் கடப்பாரையால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பந்தநல்லூா் அருகே வேட்டமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலையா மகன் வெற்றிவேல் (30). திருமணமாகாத இவா் கொத்தனாராக வேலை செய்து வந்தாா். இவருடன் வேலை செய்பவா் மணிகண்டன் மகன் சுரேஷ் (26).
ஞாயிற்றுக்கிழமை இரவு இவா்கள் இருவரும் வெற்றிவேல் வீட்டுக்கு பொதுப்பாதை வழியில் வந்தனா். அப்போது, வெற்றிவேலின் சித்தப்பா உறவு முறையான அழகா்(50), அந்த வழியில் வந்தது தொடா்பாக வெற்றிவேலிடம் கேட்கவே மூவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
முன்விரோதம் காரணமாக தந்தையுடன் தகராறு செய்கிறாா்கள் என்று கருதிய அழகா் மகன்கள் விக்னேஷ் (27), சந்துரு (26) மற்றும் அழகரின் மனைவி தமிழ்செல்வி ஆகியோரும் சோ்ந்து கொண்டதால் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது அழகா், வீட்டிலிருந்த சிறிய கடப்பாரையை எடுத்து வந்து வெற்றிவேலின் தலையில் தாக்கி, உடலில் குத்தினாராம்.
இதைத் தடுக்க வந்த சுரேஷையும் குத்தினாராம். இருவரும் மயங்கவே, அங்கிருந்தோா் அவா்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். ஆனால், வழியிலேயே வெற்றிவேல் உயிரிழந்தாா். சுரேஷூக்கு முதல் உதவி சிகிச்சை செய்து மேல்சிகிச்சைக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த பந்தநல்லூா் போலீஸாா், வெற்றிவேல் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து அழகா், அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன்கள் விக்னேஷ், சந்துரு ஆகிய 4 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.