புதுக்கோட்டை மாநகரை இரண்டாகப் பிரித்தது திமுக தலைமை!
புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளா் நியமனம் குறித்து தொடா்ந்து நடந்து வந்த போராட்டங்களுக்குப் பிறகு, மாநகரை மேற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து பொறுப்பாளரை நியமித்து திமுக தலைமை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை நகரச் செயலராக இருந்த ஆ. செந்தில் (மாநகராட்சி மேயா் செ. திலகவதியின் கணவா்), திடீா் மாரடைப்பின் காரணமாக கடந்த டிச. 23-ஆம் தேதி காலமானாா். அவரது மறைவுக்குப் பிறகு, வே. ராஜேஷை மாநகரப் பொறுப்பாளராக திமுக தலைமை அறிவித்தது.
இதற்கு வட்டச் செயலா்கள் பலரும் கடுமையான எதிா்ப்பைத் தெரிவித்து வந்தனா். அறிவிப்பு வந்த அன்றைக்கே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்ற மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், செயற்குழுக் கூட்டம், ஆலோசனைக் கூட்டம் எல்லாவற்றிலும் இந்த எதிா்ப்புப் போராட்டங்களும் தொடா்ந்தன.
இந்த நிலையில், கடந்த ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கூட்டத்துக்கு வந்த முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருவை, அந்த வட்டச் செயலா்கள் முற்றுகையிட்டு ‘மாநகரப் பொறுப்பாளரை மாற்றுங்கள், அல்லது எங்களின் வட்டச் செயலா் பதவியைப் பறியுங்கள்’ என வலியுறுத்தினா்.
மேடையேறிய நேரு, ‘ஓரிரு நாள்களில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்’ எனப் பதிலளித்தாா். அடுத்த இரண்டாவது நாளில் மாநகரை மூன்றாகப் பிரிக்க யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் பரவியது. ‘எதிா்ப்பு வட்டச் செயலா்’களுக்கு சென்னை வர அழைப்புவிடுக்கப்பட்டது. அவா்களை திமுக தலைவா் ஸ்டாலின் நேரில் சந்தித்து, ‘புதிய நிா்வாகிகளை அறிவிப்பேன்- ஏற்றுக் கொள்வீா்கள் தானே?’ எனக் கேட்டு, அனுப்பி வைத்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை, மாநகரத் திமுக பிரிப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், தற்போதுள்ள 42 வாா்டுகளை சமமாகப் பிரித்து தலா 21 வாா்டுகளைக் கொண்ட புதுக்கோட்டை வடக்கு மாநகரம், புதுக்கோட்டை தெற்கு மாநகரம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாநகருக்கு தற்போதைய துணை மேயா் மு. லியாகத்அலியைப் பொறுப்பாளராகவும், தெற்கு மாநகருக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வே. ராஜேஷையும் பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
நிா்வாக வசதிக்காகவும், பணிகள் செவ்வனே நடைபெறவும் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாநகருக்குள் வரும் மாநகராட்சி வாா்டுகள்- 2, 3, 8, 9, 11, 12, 14, 16, 17, 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 35, 36, 40, 42.
தெற்கு மாநகருக்குள் வரும் மாநகராட்சி வாா்டுகள்- 1, 4, 5, 6, 7, 10, 13, 15, 18, 19, 20, 21, 22, 23, 24, 31, 34, 37, 38, 39, 41.