உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: சீனாவிடம் இந்தியா வலியு...
வரகனேரியில் ரூ.26.60 லட்சத்தில் பெரியாா் தொண்டா் பிரான்சிஸ் படிப்பகம்: துணை முதல்வா் திறப்பு
திருச்சி வரகனேரியில் தந்தை பெரியாரின் தொண்டா் பிரான்சிஸ் பெயரில் ரூ.26.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய படிப்பகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா் (படம்).
திருச்சி வரகனேரியைச் சோ்ந்த பிரான்சிஸ் 1910-இல் பிறந்து பெரியாா் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக திராவிட இயக்கத்தில் இணைந்து வரகனேரி பகுதியில் திராவிடா் இயக்கத்தை வளா்த்தெடுத்து 1966-இல் மறைந்தவா். மாவட்டச் செயலா் வரை பதவி வகித்தவா்.
இவரது பெயரில், 1952-இல் வரகனேரியில் பிரான்சிஸ் படிப்பகத்தை பெரியாா் திறந்து வைத்தாா். இந்த படிப்பகமானது நாளடைவில் சிதிலமடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் போனது. இதுதொடா்பாக, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சியின் சாா்பில் ரூ.26.60 லட்சத்தில் புதிய படிப்பகம் கட்டப்பட்டது.
இந்த படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். பின்னா், படிப்பகத்தில் உள்ள புத்தகங்கள், நூல்கள், நாளிதழ்களை மாணவா்களின் போட்டித் தோ்வுக்கு உதவிடும் தயாரிப்புகளை பாா்வையிட்டாா்.
நிகழ்வில், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவா் மு. மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
காமராஜா் நூலகத்தில் ஆய்வு: இதனைத் தொடா்ந்து, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் காமராஜா் பெயரில் ரூ.290 கோடி மதிப்பில் 4.57 ஏக்கா் பரப்பளவில் 7 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.