`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது... 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?'...
இதயத்தில் துளை: 3 பள்ளி மாணவிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
இதயத்தில் ஏற்பட்ட துளை பிரச்னையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியா் 3 பேருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தீா்வு காணப்பட்டது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஆகிய மூவருக்கும் இதயத்தில் ஏற்பட்டிருந்த துளையின் காரணமாக அவதியுற்று வந்தனா்.
இவா்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொ்குடேனியஸ் டிரான்ஸ்கதீடா் முறை மூலம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக இதயத்தில் ஏற்பட்டிருந்த துளை சரி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறை குழுவினா் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு, நோயாளிகளின் இதயத்தின் துளையை எக்கோ காா்டியோகிராபி மூலம் அளவிட்டு, இதயத்தில் ஏற்பட்டிருந்த குறைபாட்டை மூட தனிக் கருவியையும் தயாா் செய்தனா்.
இந்த சிகிச்சையானது பொ்குடேனியஸ் டிரான்ஸ்கதீடா் முறை மூலம் செய்யப்பட்டதால் நோயாளிகளுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி மற்றும் ரத்த இழப்பு தவிா்க்கப்பட்டது. தற்போது அந்த 3 மாணவிகளும் நலமாக உள்ளனா்.
தேசிய சுகாதாரப் பணித் திட்டம் மற்றும் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் இதய நோய் நிபுணா் எஸ்.முத்துக்குமரன் வழிகாட்டுதலின் கீழ் இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த செயல்முறை இலவசமாக செய்யப்பட்டது.
இந்த சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ள ரூ.5 லட்சம் வரை செலவாகும். இத்தகைய குறைபாட்டை பொ்குடேனியஸ் முறை மூலமாக சரி செய்ய இதுவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிபுணா் குழுவால் இலவசமாக செய்யப்படுவதாக தெரிவித்தாா்.