மாவட்ட அளவிலான குறும்பட போட்டி: பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்
இந்தியர்களை மீண்டும் நாடுகடத்தும் அமெரிக்கா!
அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் நாடுகடத்தல் நடவடிக்கையில் இரண்டாவது முறையாக இந்தியர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 104 பேரை பிப்ரவரி 5 ஆம் தேதியில் அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையிலும் (பிப். 16) 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, இந்த முறையும் அமெரிக்க ராணுவ விமானமான சி17, குளோப்மாஸ்டர் III ரக விமானங்கள் மூலம், பஞ்சாபில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறக்கப்படுவர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், தங்கள் நாடு திரும்பும்வரையில் ஒவ்வொரு வாரமும் நாடுகடத்தல் நடவடிக்கை தொடரும் அமெரிக்க அரசு வட்டாரத்தில் கூறுகின்றனர்.
குடியேற்றம் உள்ளிட்ட முக்கிய இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த அடுத்த நாளே இந்த நாடுகடத்தல் நடவடிக்கை தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த முறை நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கைகள் கைவிலங்கால் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியர்கள் மீதான அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற செயலுக்கு பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை அமெரிக்க அதிகாரிகளிடம் உறுதி செய்வதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
அமெரிக்காவில் பெரியளவிலான நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்காவில் குடிவரவுத் துறைதான் நாடு கடத்தல் பணியை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் ராணுவ விமானம் மூலம் சட்டவிரோதக் குடியாளர்களை அனுப்பி வைக்கிறது.