"புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி; யார் முடிவெடுப்பது..!" - RSS தலைவர் மோகன...
இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 17 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மாகாணங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் சட்லெஜ், ரவி மற்றும் செனாப் ஆகிய நதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அம்மாகாணத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ள நீருக்குள் மூழ்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பஞ்சாப் மாகாணத்தில் 17 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், சியால்கோட்டில் 7 பேரும்; குஜராத்தில் 4 பேரும், நரோவாலில் 3 பேரும், ஹஃபிஸாபாத்தில் 2 பேரும், குஜ்ரன்வாலாவில் ஒருவரும் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் ரவி நதியின் மீது அமைந்துள்ள அணையானது திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்படக் கூடும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தியாவில் இருந்து திறக்கப்பட்ட அணையின் நீர் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பி, பஞ்சாப் மாகாணம் முழுவதும் வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக பாகிஸ்தானின் மத்திய வளர்ச்சித்துறை அமைச்சர் அஹ்சான் இக்பால் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
“இது ஒரு இயற்கை பேரிடர். இதனை எல்லையின் இருபக்கமும் அமைந்துள்ள நாடுகளின் ஒத்துழைப்பால் மட்டுமே சமாளிக்க முடியும். இந்தியாவும் இதையொரு இயற்கை பேரிடராகக் கருதி பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், திடீரென தண்ணீரை திறந்து விட்டு வெள்ளத்தை அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!