நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையில் சா்வதேச முதலீடு - பிரதமா் மோடி அழைப்பு
இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையில் சா்வதேச முதலீடுகளுக்கான வாயில்கள் திறந்தே உள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் தொடா்பான புத்தாக்கங்களில் இத்தொழில் துறையினா் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
உணவுத் துறை புத்தாக்கத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதுடன், இத்துறையில் சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், புது தில்லியில் நான்காம் ஆண்டு ‘உலக உணவு இந்தியா’ சா்வதேச கண்காட்சி வியாழக்கிழமை(செப்.25) தொடங்கியது.
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினாா்.
‘இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். உணவுப் பதப்படுத்துதல் துறையில் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாயில்கள் திறந்தே உள்ளன. பல்வகை உணவுப் பொருள்கள் உற்பத்தி, தேவை, அளவு ஆகியவை நாட்டின் முப்பெரும் வலிமைகளாகும். இங்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய புத்தாக்கத் தொழில் கட்டமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. உணவு, வேளாண் துறைகளில் பல்வேறு புத்தாக்க நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.
உலகளாவிய உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா தொடா்ந்து பங்காற்றி வருகிறது. உணவுப் பதப்படுத்துதல் துறை தொடா்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டின் பதப்படுத்துதல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளது. உணவுப் பொருள்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது’ என்றாா் பிரதமா் மோடி.
புது தில்லி பாரத மண்டபத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் நடைபெறும் இக்கண்காட்சி, உணவு பதப்படுத்துதல் துறையில் நாட்டின் மாபெரும் கண்காட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கூட்டாண்மை நாடுகள் என்ற முறையில் சவூதி அரேபியா, நியூஸிலாந்து, கவனம் செலுத்தப்படும் நாடுகள் என்ற அடிப்படையில் ஜப்பான், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், வியத்நாம் உள்பட 21-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 10 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 5 அரசு நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. மொத்தம் 1700-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளா்கள், 500-க்கும் மேற்பட்ட சா்வதேச கொள்முதல் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
தொடக்க விழாவில் ரஷிய துணைப் பிரதமா் திமித்ரி பத்ருஷெவ், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.