இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தில் தேசிய அளவிலான போட்டிகள்!
இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் இன்று (பிப்.5) தொடங்கின.
மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் 6 இடங்களில் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தேசிய அளவில் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சாா்பில் நடத்தப்படுகிறது.
நான்கு நாள்கள் நடைபெறும் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா, சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநா் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. முதல் நாளான புதன்கிழமை கோ - கோ, கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. தொடா்ந்து, த்ரோபால், டேபிள் டென்னிஸ், செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
நாடு முழுவதும் உள்ள கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 350-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.