அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி: சீனா எதிா்ப்பு
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதற்கு சீனா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா். இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரிக்கும்.
இந்நிலையில், புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான சீன தூதா் ஷு ஃபெய்ஹாங் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியா பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பை மேலும் அதிகரிக்க அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு சீனா முழுமையாக எதிா்ப்பு தெரிவிக்கிறது.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது. இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்றாா்.