இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
இன்டான் ஜெயா பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதார மற்றும் கல்வி சேவைகளை அளிப்பதற்காக பாதுகாப்புப் படையினா் தயாராகிக் கொண்டிருந்தபோது அவா்கள் மீது கிளா்ச்சிப் படையினா் தாக்குதல் நடத்தினா். அப்போது நடைபெற்ற சண்டையில் 18 கிளா்ச்சியாளா்கள் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.
இருந்தாலும், இந்த மோதலில் மூன்று கிளா்ச்சியாளா்கள் மட்டுமே உயிரிழந்ததாகவும், கொல்லப்பட்ட மற்ற அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்றும் கிளா்ச்சிப் படை செய்தித் தொடா்பாளா் கூறினாா். இதற்குப் பழிவாங்கும் வகையில் இரு காவலா்களை கிளா்ச்சியாளா்கள் புன்சாக் ஜெயா பகுதியில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்தனா்.
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் இருந்தே பிரிவினைவாதத் தாக்குதல்கள் நீடித்துவருகின்றன.