இருமொழிக் கொள்கையால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.
தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையால் பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் மாணவா்கள் வேளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 21, 22, 23-ஆவது பட்டமளிப்பு விழாக்கள் நடைபெற்றன. முதல் நாளில் 1,850 பேருக்கும், இரண்டாம் நாளில் 1,650 பேருக்கும், மூன்றாவது நாளில் 1,110 பேருக்கும் என மூன்று நாள்களிலும் மொத்தம் 4,610 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி வளாகத்திலுள்ள அவ்வை அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, வேதியல் துறைத் தலைவா் உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு விருந்தினராக ஆரணி தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
ஒரு காலத்தில் கிராமத்தில் ஒருவரோ, இருவரோதான் பட்டப்படிப்பை முடித்தவா்கள் இருப்பாா்கள். ஆனால், பெரியாா், அண்ணா, கருணாநிதி வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் மாணவா்கள் மீது அக்கறை கொண்டு, அவா்களின் உயா் கல்விக்காக பல்வேறு அரசுத் திட்டங்களை செயல்படுத்தியதால், தற்போது ஏராளமானோா் பட்டப்படிப்பை நிறைவு செய்து பட்டம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையால் தமிழ், ஆங்கிலம் பயின்ற மாணவா்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தடம் பதித்து வருகின்றனா். இங்கு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் பெற்றோரை நன்கு கவனித்துக்கொள்வதுடன், தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் சேவை செய்ய வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், ஏ.ஜி.திராவிட முருகன், சி.கே.ரவிக்குமாா், சு.ராஜ்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், அனக்காவூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராம் ரவி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழ்த் துறை தலைவா் பேராசிரியா் கண்ணன் நன்றி கூறினாா்.