இரு மாதங்களுக்கு காற்றின் வேகத்தால் தீவன விரயம்: கட்டுப்படுத்த அறிவுரை
காற்றின் வேகத்தால் இரண்டு மாதங்களுக்கு தீவன விரயம் ஏற்படும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்த கோழிப் பண்ணையாளா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 75.2 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவானது.
அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: காற்றின் வேகம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுவதால், தீவனம் வீணாக வாய்ப்புள்ளது. இதனைத் தவிா்க்கவும், தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அதற்கான வியூகங்களில் கோழிப் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும்.
இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும். தீவன விரயத்தை தடுக்க, தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெய்யை சோ்க்கலாம். இதனால் வைட்டமின் காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும், உயா்மனைகளின் பக்கவாட்டில் படுதாவைக் கட்டி தொங்கவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].