இறந்த அம்மாவின் வங்கி கணக்குக்கு திடீரென கிரெடிட்டான பல கோடி ரூபாய் - அதிர்ச்சியில் உறைந்த மகன்
உத்திர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவர் பயன்படுத்தும் வங்கி கணக்கில் திடீரென 37 இலக்கங்களில் (10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) ஒரு பெரிய தொகை வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இவ்வளவு பெரிய தொகை அவரது வங்கி சேமிப்பு கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நேற்று காலை பத்திரிகையாளர் சச்சின் குப்தா இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன்படி இந்தத் தொகையை லட்சம் கோடி என்று குறிப்பிட்டார். தற்போது வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நியூஸ் 24 அறிக்கையின் படி, இந்த வங்கி கணக்கு முதலில் தீபக்கின் தாயார் காயத்ரி தேவி பெயரில் இருந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மறைந்ததை அடுத்த தீபக் இந்த சேமிப்பு கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு தீபக்குக்கு 1.13 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
இதனை அடுத்து குழப்பமடைந்த தீபக் இந்த செய்தியை தனது நண்பர்களுடன் பகிர்ந்து இந்த தொகை குறித்து பார்க்குமாறு கேட்டு இருக்கிறார்.
மறுநாள் காலையில் தீபக் வங்கிக்கு நேரில் சென்று இந்த பண பரிமாற்றம் குறித்து விசாரித்து இருக்கிறார்.
வங்கி அதிகாரிகள் இந்த தொகை இருப்பதை உறுதி செய்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான இந்த பரிமாற்றம் காரணமாக வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் வருமானவரித்துறைக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த பண பரிமாற்றம் ஒரு தொழில்நுட்ப பிழையா வங்கி முறைகேடா அல்லது பண மோசடி வழக்கா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு இந்த நிதியின் உண்மையான சோர்ஸ் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.