இறைச்சி கடைக்காரா் கொலை: இளைஞா் மீது குண்டா் சட்டம்
சத்தியமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இறைச்சி கடைக்காரா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்து வீட்டு இளைஞா் வெள்ளியங்கிரி மீது திங்கள்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பெரியகள்ளி பட்டி முருகன் நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (வயது 48). அதே பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தாா்.
கடந்த ஜூலை 8 ஆம் தேதி அவரது வீட்டின் அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளி வெள்ளியங்கிரி (வயது 38) என்பவா் முருகேசனின் வீடு புகுந்து அவரை ஓட ஓட விரட்டி அறிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தாா்.
இதையடுத்து அரிவாளுடன் பவானிசாகா் காவல் நிலையத்தில் வெள்ளியங்கிரி சரணடைந்தாா். அவரைக் கைது செய்த போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கொலை செய்த கூலித் தொழிலாளி வெள்ளியங்கிரி பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சுஜாதா பரிந்துரையின் பேரிலும் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி உத்தரவின் பேரிலும் வெள்ளியங்கிரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
இதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளி வெள்ளியங்கிரிக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.