இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனா். மேலும், 10-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 320 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனா். மேலும், 10-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தினா். தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்துடன் ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை கரைக்குத் திரும்பினா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதால் மீன்பிடிக்க முடியாமல் கரைக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனால், ஒவ்வொரு படகுக்கும் பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம் மீனவா்கள் அச்சமின்றி பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.