தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
இலங்கைத் தமிழா்களுக்கு புதிதாக 729 புதிய வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
சென்னை: இலங்கைத் தமிழா் முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக புதிய வீடுகளை அவா் திறந்தாா்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழா்கள் வசிக்கும் வீடுகளில் பழுதடைந்த நிலையிலுள்ள 7,469 வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, 26 மாவட்டங்களிலுள்ள அந்த வீடுகளை மீண்டும் சீரமைத்துக் கட்டுவதற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் முதல்கட்டமாக 3,510 புதிய வீடுகள் ரூ.180.34 கோடி செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டன. ஏற்கெனவே, 18 மாவட்டங்களில் 2,781 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு, திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி நகா், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை மற்றும் கேசா்குளி அணை, விருதுநகா் மாவட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழா்களுக்காக 729 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அவற்றை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுத் துறை செயலா் ரீட்டா ஹரிஷ் தக்கா், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் மா.வள்ளலாா் உள்பட பலா் பங்கேற்றனா்.