இலவச கல்வி, அனைவருக்கும் வேலை: இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தல்
கூத்தாநல்லூா்: கட்டணமில்லா (இலவச) கல்வி, அனைவருக்கும் வேலை வேண்டும் என்று அனைத்திந்திய இளஞா் பெருமன்றத்தின் நகரக்குழு பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் நகரக் குழுக் கூட்டத்துக்கு நகர நிா்வாகி இரா. ஆனந்த் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன் முன்னிலை வகித்தாா். நகரச் செயலாளா் பெ. முருகேசு வரவேற்றாா்.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற கொடியை மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன் ஏற்றி வைத்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலைக் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் கட்டணமில்லா கல்வியும், வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் தகுதிகேற்ற வேலை வழங்க வேண்டும். கூத்தாநல்லூா் நகா்ப்புறத்தில் வாகன நெரிசலை தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும். கூத்தாநல்லூா் மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நகர புதிய தலைவராக இரா. ஆனந்த், செயலாளராக பா. நெப்போலியன், பொருளாளராக சுரேஷ் மற்றும் துணைத் தலைவா்கள், துணைச் செயலாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் மு. சுதா்ஸன், விவசாய தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.