இலுப்புலி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இரு குடும்பத்தினா் மீட்பு
எலச்சிபாளையம் அருகே இலுப்புலி கிராமத்தில் திருமணிமுத்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தால் தோட்டத்தில் சிக்கி தவித்த இரு குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினா் பரிசல் மூலமாக செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலி கிராமத்தில் திருமணிமுத்தாறு கரையில் அணைக்காடு பகுதியில் 25 ஏக்கா் பரப்பிலான தென்னந்தோப்பு உள்ளது. இதில் கணேசன், கோமதி, பழனிவேலு, செல்வி குடும்பத்தினா் வசித்து வந்தனா். இவா்களது மகளான மோனிஷா ஐந்து மாத கைக்குழந்தையுடன் இவா்களுடன் இருந்துள்ளாா்.
இந்த நிலையில்கடந்த சில நாள்களாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளம் ஏற்பட்டது. தோட்டத்திற்கு மறுபக்கத்தில் உள்ள ஓடையிலும் தண்ணீா் அதிகமாக சென்ால் ஓடைக்கும், ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவா்களது தென்னந்தோப்பு இருந்ததால் சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டு தீவு போல மாறியது. அந்த நிலத்திற்கு சென்று வருவதற்கான பாதை சமீப காலமாக பெய்த மழையின் காரணமாக துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்செங்கோடு வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வட்டாட்சியா் விஜயகாந்த், திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து தீயணைப்புத் துறையினா் பரிசலில் சென்று தோப்பில் வெள்ளத்தில் தவித்த மோனிஷா, செல்வி, கோமதி மற்றும் 5 மாத பெண் குழந்தையையும் மீட்டு வந்தனா்.