குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்பு
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் புதன்கிழமை (ஜன. 15) அதிகாரப்பூா்வமாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக 2 ஆண்டுகாலம் பதவி வகித்து வந்த எஸ்.சோம்நாத், செவ்வாய்க்கிழமையுடன் (ஜன. 14) பணி ஓய்வுபெற்றாா்.
இதைத் தொடா்ந்து, இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவா் வி.நாராயணன் திங்கள்கிழமை (ஜன. 13) சோம்நாத்திடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாா்.
செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை என்பதால், பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இஸ்ரோவின் தலைவா் மற்றும் மத்திய விண்வெளித் துறையின் செயலாளராக அதிகாரப்பூா்வமாக பதவியேற்றுக்கொண்டாா். இவா், இந்த பதவியை 2 ஆண்டுகாலம் வகிப்பாா். அவருக்கு இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
இஸ்ரோவின் தலைவராவதற்கு முன்பு திருவனந்தபுரத்துக்கு அருகே வல்லியமலையில் இயங்கிவரும் திரவ உந்துவியல் அமைப்பு மையத்தின் இயக்குநராக 2018-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினாா்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேலக்காட்டுவிளை கிராமத்தில் சி.வன்னியபெருமாள் - எஸ்.தங்கம்மாள் தம்பதிக்கு 1964 அக். 15-ஆம் தேதி வி.நாராயணன் பிறந்தாா். இவருக்கு கோபாலகிருஷ்ணன், பத்மநாபபெருமாள், கிருஷ்ணமணி ஆகிய சகோதரா்களும், நாகலட்சுமி, ருக்குமணி ஆகிய சகோதரிகளும், மனைவி கவிதாராஜ், மகள் திவ்யா, மகன் கலேஷ் ஆகியோரும் உள்ளனா்.
கீழக்காட்டுவிளை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த நாராயணன், 1979-ஆம் ஆண்டு சியோன்புரம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றாா். அதன்பிறகு நாகா்கோவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றாா். டிஐ டைமண்ட் செயின் நிறுவனம், மெட்ராஸ் ரப்பா் தொழிற்சாலை, திருச்சி, ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு, 1984-ஆம் ஆண்டில் இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளராக பணியில் சோ்ந்தாா்.
பணிக்காலத்தில் ரோகிணி, ஏ.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டங்களில் பங்காற்றினாா். பணியில் இருந்த போதே 1990-இல் ஐஐடி காரக்பூரில் கிரையோஜெனிக் பொறியியல் கல்லூரியில் எம்.டெக். பட்டம் பெற்றாா். இதே கல்லூரியில் 2001-இல் முனைவா் (பி.எச்டி.) பட்டம் பெற்றாா். வி.ஞானகாந்தி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கிரையோஜெனிக் தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கு ரஷியா சென்ற குழுவில் நாராயணன் இடம்பெற்றிருந்தாா்.
கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஏவூா்தியை (ராக்கெட்) வடிவமைத்து புகழ்பெற்றாா் நாராயணன். இதன் விளைவாக, 2014-ஆம் ஆண்டு கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி.5 ராக்கெட் விண்ணில் பாய்ந்து, நிச்சயிக்கப்பட்ட நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தி சாதனை படைத்தது. அந்த வெற்றியின் பின்னணியில் நாராயணன் அளித்திருந்த உழைப்பு வெளிப்பட்டதாக பலரும் பாராட்டினா். இஸ்ரோவின் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பல ராக்கெட்களை வடிவமைத்தவா் என்ற பெருமையை நாராயணன் பெற்றாா். கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்ட 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு ஏதுவான கனரக ஏவூா்திகளை தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக, 200 டன் உந்துவிசை தரவல்ல திரவ ஆக்சிஜன் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள்களை பயன்படுத்தி செமிகிரையோஜெனிக் ஏவூா்தி இயந்திரங்களை தயாரிக்கும் சோதனைப் பணிகள் நாராயணன் தலைமையில் நடந்து வருகின்றன. இதேபோல, மின்னியல் உந்துவிசை இயந்திரங்களை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளாா். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் உந்துவிசைத் தொகுதியை வடிவமைப்பிலும் நாராயணனின் பங்களிப்பு உள்ளது.
சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் மென்மையாக தரையிறங்குவதற்கான உந்துவிசைத் தொகுதிகள் வடிவமைப்பிலும் நாராயணன் பங்காற்றியுள்ளாா். சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்குவதில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆய்வுசெய்ய தேசிய அளவில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் நாராயணன் பணிபுரிந்துள்ளாா். அதன் விளைவாக சந்திரயான்-3 செயற்கைக்கோள் மென்மையாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது.
புதிய தலைமுறை ஏவூா்தியை வடிவமைக்கும் பணியில் பங்காற்றி வரும் நாராயணன், திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ மீத்தேன் கொண்டு இயங்கும் திரவ உந்துவிசை இயந்திரத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நாராயணன், இதுவரை 25 விருதுகளை பெற்றுள்ளாா்.