ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் இன்று(ஜன. 4) நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கவும் காங்கிரஸ் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவால் கடந்த டிச. 14 அன்று காலமானார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த தனது மகன் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவை உறுப்பினரானார்.
தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.