உடல் பருமனால் அதிகரிக்கும் கல்லீரல் புற்றுநோய்
சென்னை: உடல் பருமனால் ஏற்படும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை சாா்பில் கல்லீரல் புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் சென்னையில் தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி கரண் பூரி, முதுநிலை புற்றுநோய் நிபுணா் டாக்டா் சுஜித்குமாா் முல்லப்பள்ளி, ஓய்வுபெற்ற ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது மருத்துவா்கள் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகால மருத்துவத் தரவுகளை ஆய்வு செய்தால் இந்தியாவில் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதை உணர முடியும்.
உலக அளவில் ஏற்படும் மொத்த பாதிப்புகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் 6 சதவீதம் பேருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் அழற்சி, மது பழக்கம், உடல் பருமன் ஆகியவை அந்த பாதிப்புக்கான பிரதான காரணங்கள். ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறியாததே உயிரிழப்புக்கு வழி வகுக்கிறது.
அதைக் கருத்தில்கொண்டு அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையானது கல்லீரல் புற்றுநோய்க்கான பிரத்யேக கிளினீக்கை தொடங்கியுள்ளது. இங்கு அதி நவீன நோயறிதல் நுட்பங்கள், மேம்பட்ட சிகிச்சைகள், நவீன வசதிகள் உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.