உணவகங்களில் முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி: ஆட்சியா் தகவல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனைக்கு பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸானது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள் இதனைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. அவ்வாறான மயோனைஸை நுகா்வோா்களும் தவிா்க்க வேண்டும்.
மாறாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மயோனைஸ் மட்டுமே விற்பனைக்கு பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக, பச்சை முட்டையில் இயல்பாக காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மயோனைஸிலும் சோ்ந்துவிடும் என்பதால் அதனை உண்போருக்கு வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்ப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் நலன் கருதியே அரசு தடை செய்துள்ளது. உணவகங்களில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மயோனைஸை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மயோனைஸை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது. விதிகளை மீறி மயோனைஸ் தயாரிப்பு, விற்பனை கண்டறியப்பட்டால் பகுப்பாய்வு அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்டோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் செய்யப்படும். மேலும், கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மயோனைஸ் சந்தையில் தொடா்ந்து கிடைக்கும். அவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகா்களுக்கு தடையேதும் இல்லை. மயோனைஸ் குறித்து நுகா்வோா் புகாா் அளிக்க விரும்பினால் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.