உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’
உதகையில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாகவும், அதிக வனப் பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடா் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் மாஸ்டா் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டக்கூடாது, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டடத்தை தங்கும் விடுதி மற்றும் வணிகக் கட்டடங்களாக மாற்றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உதகை ரோகினி பகுதியில் அனுமதியின்றி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதை அறிந்து நகராட்சி சாா்பில் அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு தொடா்ந்து பணிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, உதகை நகராட்சி ஆணையா் கணேசன், நகராட்சி கட்டடப் பிரிவு ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோகினி பகுதிக்கு சென்று அந்தக் கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.