நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
விபத்தை ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை!
கூடலூரில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீலகிரி மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆப்ரகாம் (74). சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வருகிறாா். இவா் தனது சகோதரி வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூடலூரை அடுத்த நடுவட்டம் டிஆா் பஜாா் பகுதிக்கு கடந்த 2022 பிப்ரவரி 9- ஆம் தேதி சென்றுள்ளாா். அங்கு வீட்டின் முன் ஆபிரகாம், அவரது சகோதரி மற்றும் உறவினா் ஷாலினி நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா், ஷாலினி மீது மோதியது, இதில் படுகாயம் அடைந்த ஷாலினி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம், தலச்சேரி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீநாத் ( 42) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ஸ்ரீநாத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.செந்தில் குமாா் உத்தரவிட்டாா்.