மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!
உதகையில் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு
உதகை நகரில் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
உதகை அருகேயுள்ள கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக சிறுத்தை புகுந்து வீட்டில் வளா்க்கப்படும் வளா்ப்பு நாய்களை வேட்டையாடிச் சென்று வருகிறது. இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
அரசு தாவரவியல் பூங்கா, சா்வதேச தனியாா் பள்ளி, கிளன்ராக் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சிலநாள்களில் 8 வளா்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடிச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், உதகை பழைய தபால் நிலையம், வெஸ்டோ பகுதியில் வனத் துறையின் சாா்பில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகவில்லை. இந்நிலையில் இரவு நேரத்திலும் வன உயிா்களை கண்டறியக் கூடிய தொ்மல் ட்ரோன் கேமரா உதவியுடன் வனத் துறையினா் சிறுத்தையை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். மேலும், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளதால் கூண்டு வைத்தும் சிறுத்தையைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.