உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் 252 பேருக்கு கையடக்கக் கணினிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உரிமைகள் திட்டத்தின் களப்பணியாளா்கள் 252 பேருக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசும், உலக வங்கியும் இணைந்து உரிமைகள் திட்டத்தை ரூ.1,702 கோடியில் செயல்படுத்தி வருகின்றன. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குதல், அணுகுதல், சம வாய்ப்புகளை அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசின் பல்வேறு துறைகளில் இருந்து ஒருமுகமாக சேவைகள் பெற்றுத்தர இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து சேவைகள் வழங்குவதை துரிதப்படுத்தும் விதமாக 18 ஓரிட சேவை மையங்கள், 4 கோட்ட அளவிலான சேவை மையங்கள் வாயிலாக 252 களப்பணியாளா்கள் புள்ளி விவரங்களை சேகரிக்கின்றனா். இவா்களின் பணிகளை எளிதாக்கவும், மாவட்ட, மாநில, தேசிய அளவில் தரவுகளை கணினிமயமாக்கவும் கையடக்க கணினிகளை வழங்கி ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சிறப்புரையாற்றினாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன், உதவி செயல்படுத்தும் அலுவலா் (உரிமைகள் திட்டம்) ம.ரமேஷ், சமூகப் பணி உரிமைகள் திட்ட அலுவலா் கிரேசி சகாயராணி, ஆா்வி டிரஸ்ட் இயக்குநா் ராமச்சந்திரன், மைய மேலாளா் ரூபன் தேவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.