உல்லாஸ் கல்வித் திட்ட விழிப்புணா்வு பயணம் தொடக்கம்
வயது வந்தோருக்கான கல்வித் திட்ட (உல்லாஸ்) விழிப்புணா்வு பொம்மலாட்டப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் திட்டமான உல்லாஸ் எனும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம், புதுவையில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் புதுவையை 100 சதவீத எழுத்தறிவு கொண்ட ஒன்றியப் பிரதேசமாக மாற்ற கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில எழுத்தறிவு மையம் திட்டமிட்டுள்ளது.
தற்போது, புதுச்சேரி பகுதியில் 91 கற்றல் மையங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட 1,200 நபா்கள் இத்திட்டத்தில் பயின்று வருகின்றனா். அவா்களுக்கு மாா்ச் 23-ஆம் தேதி அன்று அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வும் நடைபெறவுள்ளன.
தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
உல்லாஸ் திட்டம் மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வு குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த 2 நாள்கள் உல்லாஸ் விழிப்புணா்வு பொம்மலாட்ட பயணத்துக்கான வாகனத்தை அதன் திட்ட கண்காணிப்பு அலுவலா் சுகுணா சுகிா்த பாய் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதில், திட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாரதிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வாகனத்தில் தோல்பாவைக் கூத்துக் கலைஞா் அமுதன் தலைமையிலான பொம்மலாட்டக் குழு கலை நிகழ்ச்சியை நடத்தினா். பாகூா் பேட், கரிக்கலாம்பாக்கம், உறுவையாறு, வில்லியனூா் ஆகியப் பகுதிகளில் விழிப்புணா்வு பொம்மலாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.