"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்புக் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
புது தில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பலான ‘ஆந்த்ரோத்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இந்தக் கப்பல் இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கத்தை எதிா்கொள்ள முக்கியப் பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உள்நாட்டில் 8 நீா்மூழ்கி எதிா்ப்பு கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட 2-ஆவது கப்பலான ஆந்த்ரோத் இந்திய கடற்படையிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இது பாதுகாப்புத் துறையில் தற்சாா்பை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. 77 மீட்டா் நீளமுடைய இந்த நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பலில், எறிகுண்டுகள் மற்றும் நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட்டுகள் பொருத்தப்படும்.
ஆத்மநிா்பா் பாரத் தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் 80 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதன் மூலம் கப்பல் கட்டுமானத்தில் இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலை மாறியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆந்த்ரோத் தீவின் பெயரை இந்தப் போா்க் கப்பலுக்கு சூட்டியிருப்பது கடல்சாா் பிராந்தியங்களைப் பாதுகாக்க இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டியுள்ளது.