சேப்பாக்கில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் சங்கத்தின் செயலாளா் ஏ.கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட தொழிலாளா்களுக்கு 8 மணிநேர வேலை மறுக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, காலணி, கையுறை, சீருடை, சோப்பு போன்றவற்றை வழங்காமல் இருப்பதாகவும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டாலும் அதிகாரிகள் உரிய பதில் தெரிவிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.
இதுதவிர, தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணை எண் 62-ஐ அமலாக்க வேண்டும், தூய்மைக் காவலா்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், நகராட்சி சங்க செயலாளா் சி.கருப்பண்ணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், துணைச் செயலாளா் ஏ.முருகேசன், சங்கத்தின் பொருளாளா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.