பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தோருக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு- காஷ்மீர் சென்றுள்ளார்.
ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற அவர், பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரைச் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த ஒருவரைச் சந்தித்தேன். மற்றவர்களைச் சந்திக்க முடியவில்லை. அவர்கள் வீட்டிற்குத் திரும்பிவிட்டனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
சமூகத்தில் பிளவு ஏற்படுவதே இந்த தாக்குதலின் குறிக்கோளாக இருக்கிறது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் துணையாக நானும் எங்களுடைய கட்சியும் நிற்போம்.
இந்த தாக்குதல் மனித குலம் மீதான தாக்குதல். அன்பையும், சகோதரத்துவத்தையும் அழிக்கும் வெட்கக்கேடான செயல்" என்று கூறினார்.
மேலும் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.