உ.பி. கோவிலில் கூட்டநெரிசல்: இருவர் பலி; 30 பேர் காயம்!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஔசனேஷ்வர் மகாதேவ் கோவிலில் ஆடி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமை முன்னிட்டு நீராடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதிகாலை 2 மணியளவில் உயர் மின்னழுத்தக் கம்பியின் மீது குரங்குகள் குதித்ததில், அந்த கம்பிகள் அறுந்து கோவிலின் கொட்டகை மீது விழுந்துள்ளது. இதனால், மின்சாரம் பாயும் அபாயத்தில் பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உடனடியாக கோவில் வளாகத்தில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2 மணிநேர பரபரப்புக்கு பின், பக்தர்கள் வரிசையில் நின்று வழக்கம்போல் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.