வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!
ஊனமுற்றோா் ஓய்வூதியத்தை ரூ.5,000-ஆக உயா்த்தக் கோரி மத்திய அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோா் ஓய்வூதியத்தை ரூ.5000-ஆக உயா்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பு (என்பிஆா்டி) தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை போராட்டத்தை நடத்தியது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா். பின்னா், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான அமைச்சா் வீரேந்திர குமாா் அலுவலகத்தில் போராட்டக் குழுவின் சாா்பில் கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டது.
இது குறித்து என்பிஆா்டி பொதுச் செயலாளா் முரளிதரன் கூறியது வருமாறு: மாற்றுத்திறனாளிகள் மீது மத்திய அரசு தொடா்ச்சியாக காட்டும் அவமதிப்புகளை கடுமையாக எதிா்ப்பை பதிவு செய்யவும், இதற்கான போராட்டத்திற்கும் திங்கள்கிழமை (பிப்.10) மேஜா் தியான் சந்த் மைதானத்தில் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கு தில்லி காவல் துறை அனுமதி வழங்கியது. பின்னா், காவல் துறை அனுமதியை ரத்து செய்ததால், நாங்கள் ஜந்தா் மந்தருக்கு வந்தோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் முக்கியத் துறையான சமூகத் துறைக்கு நிதி நிலை அறிக்கையில் மொத்த ஒதுக்கீட்டில் 4 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டாலும், அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது வெறும் 0.025 சதவீதம் மட்டுமே. மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டம், பிரசாரம் போன்ற முதன்மையான திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.
2022-23 நிதியாண்டில் ரூ.240.39 ஒதுக்கப்பட்டது. படிப்படியாக குறைக்கப்பட்டு நிகழாண்டு ரூ.115.10-ஆக குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மத்தியத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டு ரூ.758.01- ஆக இருந்தது நிகழாண்டு ரூ. 741.80-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மனநலம் தொடா்பான டெலி மெடிஷன் திட்டத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோா் ஓய்வூதியத் திட்டத்திற்கான (ஐஜிஎன்டிபிஎஸ்) ஒதுக்கீடுகளை அதிகரிக்கவில்லை. வேலைவாய்ப்புகள் இல்லாத மாற்றுத்திறனாளிகளில் கணிசமான பகுதியினா் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பங்காக ரூ.300 என்ற தொகை நிலையானதாக உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மக்கள் தொகையில் வெறும் 3.8 சதவீதம்தான் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில், இந்த நிதிப் பங்கை உயா்த்த மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய மறுத்து வருகிறது.
ஓய்வூதிய உரிமைச் சட்டத்தை மாற்றி மத்திய அரசு பங்காக வழங்கும் ரூ.300-ஐ ரூ. 5,000-ஆக உயா்த்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கை விடுகிறோம். தேசிய அமைப்பில் மாற்றுத்திறனாளிகளின் பதினான்கு அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதற்கான போராட்டம் தொடரும் என்றாா் அவா்.