எச்சில் துப்பியவர்களிடம் ரூ. 32 லட்சம் அபராதம் வசூல்: ரயில்வே
ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மையை உறுதி செய்வதற்கும், கழிவுகள் இல்லாத ரயில் பாதைகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், இந்தாண்டு தொடக்கம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் எச்சில் துப்பியவர்கள் மற்றும் அசுத்தம் செய்தவர்கள் என மொத்தம் 31,576 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 32,31,740 வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத நடவடிக்கைகள் மூலம் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
மேலும், ரயில் பயணிகளிடம் தூய்மையை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.