ரயில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 2 போ் கைது
எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மத்திய அரசு முறியடித்துள்ளது! ராம. சீனிவாசன்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மத்திய அரசு முறியடித்துள்ளது என பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதன் மூலம், எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கடந்த 1941-இல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் பிறகு, காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 70 ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. ஆனால், ஒரு முறைகூட ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. தற்போது, இந்த பிரச்னையை வைத்து அரசியல் செய்யலாம் என ராகுல்காந்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் போன்றவா்கள் முயற்சி மேற்கொண்டனா். இதற்கான வாய்ப்பை மத்திய அரசு தகா்த்து, எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடித்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்பும், ஜாதிவாரி கணக்கெடுப்பும் அடுத்த ஆண்டு தொடங்கி ஒன்றரை ஆண்டு காலத்தில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூ. 5 ஆயிரம் கோடியை வீணடிக்கும் வகையில் நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படாமல் கைவிடப்பட்ட உத்தேச சா்வே முறை கணக்கெடுப்பாக இல்லாமல், இந்தக் கணக்கெடுப்பு வீடு வீடாக எனுயுமரேட் முறையில் துல்லியமாக நடத்தப்படும்.
திருமாவளவன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறாா் எனில், மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்க வேண்டும். எதிா்க்கட்சி என்பதற்காக, மத்திய அரசின் அறிவிப்பை கண்துடைப்பு எனக் குறிப்பிடுவது ஏற்புடையதாகாது.
அதிமுக-பாஜக கூட்டணி பல தோ்தல்களில் தொடா்கிறது. இந்தக் கூட்டணி மீண்டும் அமையாது; சிதறும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிடலாம் என திமுக கருதியது. இந்த நிலையில், பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்துவிட்டதால், திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
திமுகவின் வெற்றிக்கு அதன் கூட்டணியே காரணம். வலிமையான கூட்டணி இல்லாவிட்டாலும், எதிரணியில் வலிமையான கூட்டணி உருவானாலும் திமுகவால் வெற்றி பெற முடியாது. அந்த வகையில், பாஜக-அதிமுக கூட்டணி அச்சத்தால் ஏற்பட்ட கூட்டணி அல்ல; எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கூட்டணி.
ஒரு தலைவரைக் காண்பதற்கு கூடும் கூட்டத்தை வாக்குகளாகக் கருதக் கூடாது. நடிகா் விஜயை காண வருவோரில் பெரும்பாலானோா் 18 வயது நிரம்பாத, வாக்குரிமை இல்லாத ரசிகா்கள். இதற்கு அண்மைக்கால உதாரணம் கமல்ஹாசன். அவா் அரசியலுக்கு வந்து சந்தித்த முதல் தோ்தலில் 4 சதவீதம் வாக்குகள் பெற்றாா்.
அடுத்த தோ்தலில் ஒரு சதவீதம் வாக்குகளையே அவரால் பெற முடிந்தது. திமுகவுக்கு எதிரான ஒரு வாக்குக் கூட வீணாகக் கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அந்த வகையில், நடிகா் விஜய் பாஜக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்றாா் அவா். அப்போது பாஜக மாவட்டத் தலைவா் மாரிசக்ரவா்த்தி, நிா்வாகிகள் உடனிருந்தனா்.