``என் பங்கு பாதி உடம்பை பிரித்து கொடு.." - தந்தையின் இறுதிச் சடங்கில் மகன் குடிபோதையில் தகராறு!
குடிகாரர்கள் குடிபோதையில் செய்யும் காரியங்கள் சில நேரம் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கும். பல நேரங்களில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தும். மத்திய பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவத்தால் ஊரே கலகலத்துப்போனது.
மத்திய பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்தில் உள்ள லிதோராட்டால் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் (85). இவர் தனது இளைய மகன் தஸ்ரஜ் என்பவருடன் வசித்து வந்தார். தயானி சிங்கின் மூத்த மகன் கிஷன் அருகில் உள்ள நகரத்தில் வசித்து வந்தார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த தயானி சிங் திடீரென இறந்து போனார். இது குறித்து அவரது மூத்த மகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது மூத்த மகன் கிஷன் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்தார். தனது தந்தையின் இறுதிச்சடங்கை `நான் தான் செய்வேன்' என்று கிஷன் தெரிவித்தார்.
ஆனால், `நான் தான் இறுதிச்சடங்கை செய்வேன்' என்றும், `தந்தை இறந்தபோது என்னை இறுதிச்சடங்கு செய்யவேண்டும்' என்று கூறிவிட்டு இறந்துவிட்டதாக தஸ்ரஜ் தெரிவித்தார். ஆனால் அதனை கிஷன் ஏற்றுக்கொள்ள மறுத்தார். கிஷன் குடிபோதையில் நான் தான் இறுதிச்சடங்கை செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து தந்தையின் இறந்த உடம்பின் பாதி பகுதியை பிரித்து தன்னிடம் கொடுக்கவேண்டும் என்றும், அதனைக்கொண்டு இறுதிச்சடங்கை செய்வேன் என்றும் கிஷன் தெரிவித்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாத காரணத்தால் இது குறித்து கிராமத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து கிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு கிஷன் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இதையடுத்து, இளைய மகன் தஸ்ரஜ் தனது தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தினார். குடிபோதையில் கிஷன் செய்த செயலால் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.