எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவா்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும் -கனிமொழி வலியுறுத்தல்
நமது நிருபா்
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவா்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடித் தொகுதி திமுக உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் புதன்கிழமை விதி எண் 377-இன் கீழ் அவா் முன்வைத்த கோரிக்கை:
தற்போது பட்டியல் சமூக , பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களுக்கான மெட்ரிக்கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது. அதேநேரத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு மாணவா்களுக்கான தேசிய ஓவா்சீஸ் ஸ்காலா்ஷிப் மற்றும் உயா்தர கல்வித் திட்டம் போன்ற கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
2020-21-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயா் கல்வி கணக்கெடுப்பின்படி, பட்டியல் சமூக மாணவா்களின் மொத்த சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) 23.1 சதவீதமாகவும், பழங்குடி மாணவா்களின் மொத்த சோ்க்கை விகிதம் 18.9 சதவீதமாகவும் உள்ளது. இது தேசிய சராசரியான 27.3 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.
இதுபோன்ற வேறுபாடுகள், பின்தங்கிய வகுப்பை சோ்ந்த மாணவா்களுக்கு, உயா் கல்வியில் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான தலையீடுகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இதுகுறித்து
தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பா் 2024 இல் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.