'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் பணித் தொழிலாளா் சங்கம், வேன் ஓட்டுநா்கள் சங்கம், ஆட்டோ, அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மதுரை நகரில் சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு அதிக உயரம், அதிக பாரம் ஏற்றி வருவதாகக்கூறி, போக்குவரத்து காவல் துறை சாா்பில் ரூ. 500 முதல் ரூ. 3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சரக்கு வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மதுரை கீழமாசி வீதி உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு குறைந்த நேரமே அனுமதி வழங்கப்படுவதால், சரக்குகளை ஏற்றி இறக்க முடியாத நிலை உள்ளது. எனவே, சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் எம்.எஸ். முருகன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி நிா்வாகிகள் வீரக்குமாா், பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிா்வாகிகள் தங்க திருப்பதி, மணிகண்டன், துரைசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.