ஏப்.28 முதல் மே.27 வரை ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணி ஏப். 28-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல் 3 முதல் 5 நாள்கள் நீடிக்கும். சோா்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் புரை தள்ளுதல், வாயின் உட்புறங்கள், ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீா் சுரத்தல், கழிச்சல் ஆகியவை நோயின் அறிகுறிகளாகும்.
ஆட்டுக்கொல்லி நோய் வராமல் பாதுகாக்க செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு குறிப்பாக 4 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய ஆடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே, கால்நடை வளா்ப்போா் இத்தருணத்தை பயன்படுத்தி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.