ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; தீப்தி சர்மா முன்னேற்றம்!
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (டிசம்பர் 30) வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் தீப்தி சர்மா சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
2 போட்டிகளில் தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா ஐசிசி ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங்கை பொருத்தவரையில், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நான்கு இடங்கள் முன்னேறி, 22-வது இடத்தில் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் 29 ரன்கள் மற்றும் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். ரிச்சா கோஷ் ஏழு இடங்கள் முன்னேறி 41-வது இடத்தில் உள்ளார். ஹர்மன்பிரீத் கௌர் மூன்று இடங்கள் சறுக்கி 13-வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: பும்ராவை நினைத்து பச்சாதபம் ஏற்படுகிறதா? கம்மின்ஸ் கூறியதென்ன?
பந்துவீச்சில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோனும், பேட்டிங்கில் தென்னாப்பிரிக்க வீராங்கனை லாராவும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.